Wednesday 22 August 2012

அக்கறை

மெத்தப்படித்த ஔரங்கசீப் கொடுங்கோலன் எனப்படும் போது,கல்விகற்கும் வாய்ப்பை இளமையில் இழந்த அக்பர் மகாஅக்பர் என அழைக்கப்படுவது ஏன்?

தன் குழந்தைப்பருவம் முழுவதும் தன் தந்தையுடன் உயிருக்கு அஞ்சி பாலைவனங்களில் அலைந்து திரிந்த அக்பருக்கு தான் கல்வ
ி கற்கவில்லையே எனும் ஏக்கம் இருந்தது.அந்த ஏக்கத்தினை எப்படி தீர்த்துக்கொண்டார்? தன் சபை முழுவதும் தான்சேன்,அபுல்பசல்,பீர்பால் போன்ற கற்றறிந்த சான்றோர்களையும் ஆன்றோர்களையும் தன்னருகே வைத்துக்கொண்டார்.கலைகளையும்,இலக்கியங்களையும் ஊக்குவித்தார்.சமய,சமூக நல்லிணக்கத்தை பேணிக்காத்தார்.இத்தகு காரணங்களால்தான் அவர் மகா அக்பர் என அழைக்கப்படுகிறார்.

அடுத்து நம்முடைய காமராசர்.மூதறிஞர் என அழைக்கப்படும் ராஜாஜி,தீரர்சத்தியமூர்த்தி என்ற ஜாம்பாவான்களைவிட மக்களால் கர்மவீரர் என அன்புடன் அழைக்கப்படுகிறார்,ஏனெனில் பள்ளிப்படிப்பையே பாதியில் கைவிட நேர்ந்த காமராசருக்கு சமூகத்தின்பால் அக்கறை இருந்தது,அதனால்தான் அவர் காலத்தில் பல ஆயிரம் பள்ளிகள் துவங்கப்பட்டன,பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்கும் விதமாக மதிய உணவு உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.மேலும் பல மக்கள் நல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன,இதனால்தான் இன்றும் கர்மவீரர் மக்கள் மனதில் நிலையான இடம்பிடித்து வாழ்கிறார்.

கல்வி பயில முடியாத அக்பருக்கும்,காமராசருக்கும் சமூகத்தின் மீது இருந்த அக்கறை,இன்று பல தடைகளை தாண்டி உயர்ந்த நிலைக்கு வந்த பலருக்கு இல்லாமல் போனது ஏன்?

பெரியாரின் சமூகநீதி போராட்டங்களால் தங்களின் முந்தைய தலைமுறை சமூக விடுதலை பெற்றதை மறந்து பெரியாரை இகழ்வதை என்னென்று சொல்வது?

அம்பேத்கர் பெற்றுத்தந்த இட ஒதுக்கீட்டில் படித்து விட்டு அம்பேத்கரா எங்களுக்கு பரீட்சை எழுதினார் என்று கேட்போரை எந்த வரிசையில் சேர்ப்பது?

அடித்தளத்தில் இருந்து எப்படியோ போராடிஒரு அந்தஸ்தினை பெற்ற பிறகு,அப்பாடா தப்பித்தோம் என்று பெருமூச்சு விடுவோரையே இப்போது பெரும்பாலும் காணமுடிகிறது.தன்னைப்போல் இருக்கும் தன் சமுகத்தை கைதூக்கி விடவேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இல்லாமல் போனதே.

பெரியார்,அம்பேத்கர்,காமராசர் போன்றோரும் சுய நலத்தோடு தங்கள் நலன்,தங்கள் குடும்ப நலன் என்று சிந்தித்திருந்தால் நம் நிலைமை என்னவாகியிருக்கும்?

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம் பழுத்தற்று. என்று சொன்னான் வள்ளுவன்.

இதன் பொருள் மற்றவர்க்கு உதவும் இரக்ககுணமில்லாதவனிடம் இருக்கும் செல்வமானது ஊருக்கு நடுவே நச்சு மரத்தில் பழுத்திருக்கும் பழம் போன்றது என்பதாகும்.

மேலே குறிப்பிட்ட தலைவர்கள் ஊருக்கு நடுவே பழுத்திருக்கும் நல்ல கனியாக விளங்கினார்கள்.எனவேதான் மக்கள் மனதில் நன்றியுடன் போற்றப்படுகிறார்கள்.

நாம் எப்படி? ஊருக்கு நடுவே பழுத்திருக்கும் நச்சுக்கனியா? நல்ல கனியா?

No comments:

Post a Comment